Tuesday, November 13, 2007

இணுவில் இந்துக் கல்லூரிக்கு தீவைப்பு

இணுவில் இந்துக் கல்லூரிக்கு நேற்று நள்ளிரவு இனம் தெரியாதவர்கள் தீவைத்துக் கொழுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இந்த விசமிகளின் நடவடிக்கையினால் பாடசாலை அதிபரின் அலுவலகக் கதவுகள் தீயில் எரிந்துள்ளதுடன் தேநீர் சாலையிலும் தீயிடப்பட்டுள்ளது.

ஆனாபோதிலும் இவைகள் முழுமையாக எரியாமையால் பாடசாலை தீயில் இருந்து தப்பியுள்ளது. இதேவேளை பாடசாலையின் அலுமாரிகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதோடு வாழைத் தோட்டம் வெட்டிச் சரிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸில் அதிபர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் தமது விசாரனையைத் தொடர்ந்து ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தள்ளனர். மேலும் சிலரைத் தேடுவதாதகவும் தெரியவருகின்றது.

குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

Friday, October 12, 2007

மனித உரிமைகளுக்கான தூதுவருக்கு
யாழில் கண்ணீர்க் கதறல் வரவேற்பு


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் லூயிஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மற்றும் கதறலுடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.

லூயிஸ் ஆர்பர் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐநா தூதரகத்திற்கு முதலில் வருகை தந்தார். யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் உறவினர்கள் கதறி அழுத வண்ணம் அவரை வரவேற்றார்கள்.

காலையில் அந்த இடத்திற்கு வந்து கூடிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதற்கு இராணுவத்தினர் தம்மாலியன்ற முழுப் பணிகளையும் மேற்கொண்டனர். ஐநா தூதரிடம் பொதுமக்கள் தமது குறைகளைக் கூறமுயன்ற போதிலும் படையினரின் பலத்த தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. படையினரின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போகாமல் திடமுடன் நின்ற மக்கள் தூதுவரைச் சந்தித்து தமது வேதனைகளை அவருக்கு எடுத்துக் கூறினர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தில் நடைபெறவிருந்த சந்திப்பில் யாழ் மக்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் தவிர்ந்த யாரும் குறிப்பிட்ட இடத்திற்கு அண்மையில் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்தில் சோதனைகள் அதிகரிப்பு


யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. வழமைக்கு மாறாக, முலைவைச் சந்தி உதயன் சந்தி கொன்மன்ற் சந்தி கொட்டடிச் சந்தி இலுப்பையடிச் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தை சூழவுள்ள பிரதான வீதிகள் உட்பட நகரிலுள்ள அனைத்துச் சிறு வீதிகளிலும் திடீர் சோதனைத் தடைகள் அமைத்து பொதுமக்கள் சோதனையிடப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் அணியினர் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் நின்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டார்கள் இதனால் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொது மகக்ளின் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

பேராயர் இல்லப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் யாரையும் அனமதிக்கவில்லை. இதேவேளை செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களும் அங்கு நின்ற படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஐநா மனித உரிமைகளுக்கான தூதர் வருகையைஒட்டி யாரும் அவரைச் சந்திக்கவிடாமல் தடுக்கும் முகமாக இத்தகைய நடவடிக்கையை படைத்தரப்பினர் மேற்கொண்டனர்.

இராணுவ மோட்டார் சைக்கிள் மோதி
அப்பாவி இளைஞர் படுகாயம்

சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஏழாலை தம்புவத்தையைச் சேர்ந்த அரியநாயகம் சயீதரன் (28) என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.

சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில் கடமையாற்றுகின்ற இவர், மோட்டார் சைக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதி அவரது மோட்டார் சைக்கிளைத் தூக்கி எறிந்தது.

படுகாயமடைந்த சயீதரன் உடனடியாக அங்கிருந்தவர்களினால் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டார். விபத்துக்குக் காரணமான அதிரடிப்படையினர் அங்கிருந்து ஓடித் தப்பி விட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Monday, October 1, 2007

வேலணையில் ஒருவர் பலி

இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேலணையில் ஓருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

வேலணை மேற்கைச் சேர்ந்த நடராசா ரவீந்திரன் (40) என்பவரே பலியான குடும்பஸ்தர் ஆவார். இவருடைய கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை ஊர்காவற்துறைப் காவற்றுறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.


சரணடையும் சம்பவங்கள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்றும் மூவர் சரணடைந்துள்ளனர். இனம் தெரியாதவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் சரணடைந்துள்ளார்கள் என்று ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மராட்சி, வலிகாம் பகுதிகளைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களே இப்படிச் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் மனித உரிமைகள் அலுவலக ஊழியர்களினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைப் பாதுகாப்புக்காக காவலில் வைப்பதற்கு யாழ். காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைபவர்களின் எண்ணிககை அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.


சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டன

கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கிராம அலுவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலங்கள் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பொலிகண்டிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலம் தும்பளையைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான விஜயரெட்னம் விஜயகாந் என்பவருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலத்தை அவர்கள் பொறுப்பேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோன்று சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகக் கூறி ஒப்படைக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான லொறிச் சாரதி பத்மநாதன் பத்மலோகன் (30) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் யாழ். பஸ் நிலையப் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை இவர் கடத்திச் செல்லப்பட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். காவல் நிலையத்திலும் இது தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
அதிகாலை இருவர் சுட்டுக் கொலை

கடந்த சனிக்கிழமை அதிகாலை வெள்ளை வானில் கொண்டுவரப்பட்டு; இறக்கிஇரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவரின் சடலம் மருதனார் மடம் உரும்பிராய் வீதியில் உள்ள இணுவில் புகையிரத நிலையத்திற்கு அணமையாக் காணப்பட்டது. மற்றைய சடலம் சுன்னாகம் மாசியப்பிட்டி வீதியில் உள்ள குளத்திற்கு அண்மையாக வயல் வெளியில் உள்ள வீதியில் காணப்பட்டது.

மருதனார்மடம் விதியில் காணப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் வைத்து நேற்றுமுன்தினம் கடத்தப்பட்ட இணுவில் மேற்கைச்சேர்ந்த பாலசுப்பிரமணியம் சனாதரன் (25) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கந்தரோடை வீதியில் காணப்பட்ட சடலம் இனம் காணப்படவில்லை குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன், சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவற்றை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்கும் படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள்ளார்.


தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் கடத்தப்பட்டார்

சுன்னாம் பகுதியில் கடந்த வெள்ளியன்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம்தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.

இரவு 9.00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில்; நிறுத்திவிட்டு ஆனந்தரெத்தினம் கஜன் (22) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பெற்றோர்கள் இது தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள்.


வீடு புகுந்து இளைஞன் கடத்தல்

கடந்த வெள்ளியன்று இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் வந்து வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இரவு நேரம் வீட்டிற்கு வந்தவர்கள் இளைஞரின் பெயரைக்கூறி அழைத்தனர் எனவும் -
வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்றபோது குறிப்பி;ட இளைஞரை கடத்த முற்பட்டனர் எனவும் -

இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது எனவும் -

அதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் -

கடத்தப்பட்ட இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இளைஞன் கடத்தப்படுவதைத் தடுக்க அவனது பெற்றோர்கள் போராடியதைத் தொடர்ந்து ஆயுததரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞனின் தாய் மயக்கமுற்ற நிலையிலும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுசெல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுக்க உள்ளாகியவர்கள் திரு திருமதி இராசதுரை. இவர்களின் 23 வயதான மகன் பிரபாகரே ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

Friday, September 28, 2007

இணுவிலில் கிளைமோர்: இளைஞன் காயம்

இணுவிலில் இன்று காலை கிளைமோர் வெடித்ததில் இளைஞர் ஒருவரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டன என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காலை 9. 00 மணியளவில் இந்தச் சம்பவம் காரைக்கால் சிவன்கோவிலுக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.

காலையில் வீதியால் வந்த இளைஞரே கிளைமோருக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த இளைஞர் வீதியில் மயக்கமுற்ற நிலையில் இரத்தப் வெள்ளத்தில் கிடந்தார் எனவும் -

கிளைமோர் வெடித்த சத்தத்தைக்கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த படையினர் அந்த இளைஞரைக் கொண்டு சென்றனர் என்றும் - அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரை எடுக்க முற்பட்ட வேளையே அது வெடித்தது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். பக்கச்சார்பற்ற தகவல்கள் இதனை ஊர்ஜிதப்படுத்தவில்லை.


அராலி இந்துக் கல்லூரி சம்பியன்

சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 16 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அராலி இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மைதானத்தில் சங்கானை கல்விக்கோட்ட பணிப்பாளர் துரை எங்கரசு தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் அராலி இந்துக் கல்லூரி 16 வயதுப் பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை 01 க்கு 00 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டு சங்கானைக்கோட்ட சம்பியனாகியது.

முறைகேடான ஆட்டம்

18 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் தமது மேலங்கியை கழற்றி மைதானத்தில் சுழற்றியமைக்காக மத்தியஸ்தரினால் மஞ்சல் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் ஒரே சமயத்தில் தண்டனை எல்லைப் பகுதிக்குள் முறைகேடாக விளையாடினர். எதிரணி வீரரை அவர்களில் ஒருவர் காலால் உதைக்க மற்றவர் பந்தை கையால் தட்டினார்.

இதனை அவதானித்த மத்தியஸ்தர் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அணிக்கு தண்டனை உதைக்குரிய வாய்ப்பை அளித்தார். அதனை ஏற்க்க மறுத்த அராலி இந்துக் கல்லூரி அணியினர் தொடர்ந்து விளையாடவும் எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்தில் இருந்தனர். இதனை அடுத்து ஆட்டம் முடிவடைந்ததாக அறிவித்த நடுவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் 18 வயதுப் பிரிவினருக்கான கேடயத்தை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு பிரதம விருந்தினர் ஓய்வுபெற்ற தென்மராட்சி உடற்கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.லோகநாதன் வழங்கி கௌரவித்தார்.


சித்தன்கோணியில் தொடர் பதற்றம்

சித்தன்கேணிச் சந்தியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் அடுத்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை இன்றுடன் மூன்றாவது நாளாகவும் காணப்படுகின்றது.

அந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் வாகணங்களை மறிப்பதும் இளைஞர்களைத் தாக்குவதுமாக அராஜகம் செய்தபடி இருக்கின்றனர் குறிப்பாக வர்த்தக நிலையங்கள் முழுமையாகத் திறந்து இயங்காத நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. அத்துடன் வீதியால் செல்லும் பொதுமக்கள், அரச ஊழியர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் வீதியில் உள்ள புற்கள் பற்றைகளைத் துப்புரவு செய்யும்படியும் மரங்களை வெட்டும்படியும் வற்புறுத்தி வேலை வாங்கி வருகின்றனர் இராணுவத்தினர்.

இதன் காரணமாக பலரும் பிரதான வீதிகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து ஒழுங்கைகள் ஊடாக பயணம் செய்து வருகின்றார்கள். இதையறிந்து தற்போது சங்கானை டச்சு வீதியிலும் இராணுவத்தினர் நின்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்த வீதியால் செல்லும் மக்கள் அவ்வப்போது தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


இராணுவத்தினர் விபரம் பெற்ற பின்னரே

யாழ்ப்பாணத்தில் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களது குடும்ப விபரங்கள், ஆதரிக்கும் கட்சி, தொலைபேசி இலக்கம், கல்வித்தகமை, தொழில் போன்ற விபரங்களை அண்மையில் இராணுவத்தினர் பெற்ற பின்னரே மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சட்டத்தரனிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன என்றும் -

கப்பம் கேட்டல் மற்றும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் - பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரனிகள் கடந்த வாரம் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள். எனினும் இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றக் கடமைக்குத் திரும்பியுள்ளனர். இருந்தபோதிலும் தமக்கு எந்தநேரமும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ஆதங்கத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள்.

Monday, September 24, 2007

உலக சமாதான தின நிகழ்வு


யாழ். செயற்பாட்டு மையத்தினால் உலக சமாதான தினமான செப்டெம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகள் நடத்தப்பட்டன. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனின் சொற்பொழிவும் திருமறைக் கலாமன்றத்தினரின் நடன நிகழ்வும் பிரபல இசைக் கலைஞரும் விரிவுரையாளருமான த.றொபேட்டின் அமைதி இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. மல்லாகம் மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மனித உரிமைகள் ஆனைக்குழுவில் இருவர் சரண்

மனித உரிமைகள் அலுவலகத்தில் மேலும் இருவர் கடந்த 20ஆம் திகதி சரணடைந்துள்ளனர். தமது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே அவர்கள் சரண் அடைந்துள்ளார்கள் மீசாலையைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருமே சரணடைந்தவர்களாவர்.

இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினர் ஆகியோரின் அச்சுறுத்தல் காரணமாக அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்து வருகின்றார்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சரணடைந்த இருவரும் மனித உரிமைகள் ஆனைக்குழ அலுவலகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தி;ன் முன்நிறுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.